கிழக்கிந்திய முதலாளித்துவமும் கேடானதே!


- அருணன்

நூலின் மூன்றாம் பகுதிக்கான தலைப்பே பரபரப்பானது. அது : “மார்க்ச்சுக்கும், மார்க்கெட்டுக்கும் அப்பால் உலகத்துக்கான முன் மாதிரி”. இந்திய அரசியலில் மூன்றாவது மாற்று பற்றிப் பேசப்படுவது போல உலக சமூகக் கட்டமைப்பிற்கு ஒரு மூன்றாவது மாற்றைப் பரிந்துரைக்கிறார் எஸ்.குருமூர்த்தி. தலைப்பைப் பார்த்தால் இது சோசலிசமும் அல்ல, முதலாளித்துவமும் அல்ல என்பது போலப்படும். ஆனால் முத்தாய்ப்பாக இவர் கூறுவது “நமக்குத் தேவை முறைசாரா அமைப்புகளோடு இணைந்து செயலாற்றக் கூடிய ஒரு சந்தை. அது மட்டுமே நிலைத்து நிற்கும்” என்பதுதான். சந்தை என்று இவர் கூறுவது முதலாளித்துவத்தையே என்பதைக் கண்டு வந்தோம். அதிலே ஒரு வகையைத் தான் மனிதர் பரிந்துரைக்கிறார். ஆக, இது மூன் றாவது மாற்றே அல்ல. ஏற்கனவே இருக்கிற முதலாளித்துவ அமைப்பில் ஒரு முக்கிய மாறுதலையே கோருகிறார்.அது என்னவெனில் “முறைசாரா அமைப்பு களோடு இணைந்து செயலாற்றக்கூடிய” தன்மை முதலாளித்துவத்திற்கு வேண்டும். அதுதான் அமெரிக்க பாணி முதலாளித்துவத் திடம் இல்லை என்கிறார். அப்படியெனில், “முறைசாரா அமைப்புகள்” என்று இவர் எவற் றைச் சொல்லுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.மனிதர் இந்தியாவுக்குத் திரும்புகிறார். ஆதி காலத்தில் பல நூற்றாண்டுகளாகப் பொருளா தாரத்தில் ஓங்கி நின்றிருந்த இந்தியாவும், சீனா வும் பின்னர் தேங்கிப் போயின என்பதை ஒப் புக் கொள்கிறார். வணிகம் சார்ந்த முதலாளித் துவ அமைப்பு முறை மேற்கில் எழுந்து வந்த தால்தான் அது கிழக்கை முந்திப்போனது என் பதையும் ஏற்றுக் கொள்கிறார்.
நாகரிகத்தில் பெரிதும் செழித்திருந்ததாகச் சொல்லப்பட்ட ஆசியாவில் முதலாளித்துவம் தோன்றாமல் அது ஏன் ஐரோப்பாவில் தோன்றியது எனும் கேள்வி வரும்போது தான் மனிதர் குழம்பிப் போகிறார். அவரால் சத்தியத்தை நேருக்கு நேராய் தரிசிக்க முடியவில்லை.“நவீன முதலாளித்துவம் என்பது புரா டெஸ்டன்ட் கிறித்துவ நெறிமுறைகளின் விளைபொருள்” என்று மாக்ஸ் வெபர் எழுதி னார். ஆகையினால் கர்மா, மறுபிறப்பு ஆகி யவை மீது நம்பிக்கை கொண்டிருந்த இந்து மதம், பௌத்தம் போன்ற சமயங்கள் எல்லாம் நவீன முதலாளித்துவம் வளர உதவாது என் றும் அவர் சொன்னார்” என்று வருத்தத்தோடு எழுதிச் செல்கிறார். முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கும், கத்தோலிக்க கிறித்துவத் திற்கு எதிராக ஐரோப்பாவில் கிளர்ந்தெழுந்த புராடெஸ்டன்ட் இயக்கத்தின் தோற்றத்திற்கும் இடையே பலத்த தொடர்பு உண்டு. கத்தோலிக்க கிறித்துவமானது நிலப்பிரபுத் துவத்தின் சித்தாந்த அடையாளம் மற்றும் மத ஸ்தாபனமாக இருந்தது. அதை எதிர்த்த இயக்கமானது தோற்றத்தில் மதச்சீர்திருத்த செயல்பாடாகவும், உள்ளுக்குள் புதிதாக எழுந்து வந்திருந்த முதலாளி வர்க்கத்தின் பொருளாதார- சித்தாந்த அபிலாஷைகளின் வெளிப்பாடாகவும் இருந்தது. கிறித்துவத்தின் சில அடிப்படை அம்சங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்ற கூறுகளை எல்லாம் பகுத்தறிவு நோக்கில் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். இது முரட்டு நம்பிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளி பகுத்தறிவுவாதத்தை முன்னுக்கு கொண்டு வந்தது. இது முடிவில் பரிசோத னை அடிப்படையிலான விஞ்ஞானத்தையும், புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகளையும் ஐரோப்பாவுக்கு வழங்கியது. வேறு சில பௌதீக-பூகோள-வரலாற்றுக் காரணங்கள் இருந்தாலும் இந்தச் சித்தாந்தப் போராட்டம் ஒரு முக்கியமான பங்களிப்பை செலுத்தியது.இப்படியொரு எதிர்ப்பு இயக்கம் வைதீக இந்து மதத்திற்குள்ளோ அல்லது இஸ்லாமிற் குள்ளோ அல்லது பௌத்தத்திற்குள்ளோ நடக்கவில்லை. ஆசியாவின் நிலப்பிரபுத்துவ மும், அதன் சித்தாந்த அடையாளமான மதங் களும் இங்கே மூடுண்ட அமைப்புகளாகவே இருந்தன. பிரம்மத்தோடு ஒன்றுதல், பக்தி இயக்கங்கள், சரணாகதி தத்துவங்கள் என்ற பெயரில் இவை நம்பிக்கைவாதத்தையே தூக் கிப் பிடித்தன.

பகுத்தறிவு கீற்றுக்கள் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. மனிதர்களை நம்பு ... நம்பு.... என்று வம்பு செய்தனவே தவிர, சுதந்திரமாக யோசி...யோசி என்று உற்சாகப் படுத்தவில்லை- குறிப்பாக இடைக்காலம் எனப்பட்ட நிலப்பிரபுத்துவ யுகத்தில். அதனால்தான் கிழக்கு பிந்தியது, மேற்கு முந்தியது- கூடவே வேறு சில காரணங்கள் இருந்த போதிலும்.இந்த வரலாற்று உண்மையை ஏற்க குரு மூர்த்தியாருக்கு மனமில்லை. அவருக்கு கோபம் கோபமாக வருகிறது. “மாக்ஸ் வெபர் இந்தியாவின் சமூக, பொருளாதார , அரசியல் சிந்தனையாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இதன் விளைவாக இந்தியச் சிந்தனையாளர்கள் கர்மா, மறுபிறவி ஆகியவற் றின் மீதான நம்பிக்கை, இந்தியாவின் சாதி அமைப்பு ஆகியவையெல்லாம் ஒன்று சேர்ந்து இந்தியாவை அழித்து விட்டது என்று முழுமை யாக நம்பினார்கள். ஆகவே இந்தியா இவற்றை யெல்லாம் துறந்தால் ஒழிய, அதாவது இந்தியா தன்னையே மறுதலித்தால் அன்றி முன்னேற வழியில்லை என்று நம்பினார்கள்” என்று ஆத்திரத்தோடு எழுதுகிறார்.பூனைக்குட்டி சாக்குப்பையிலிருந்து வெளியே வந்து விட்டது. இந்தியா என்றாலே கர்மா, மறுபிறவி, சாதி என்பதுதானாம்! அவற்றைக் கைவிடச் சொல்வது இந்தி யாவையே கைவிடுவதாம்! இந்தியா பின்தங் கிப் போனதற்கு வைதீக மதக்கோட்பாடுகளும் காரணமல்ல, சாதி எனும் சமூகக்கட்ட மைப்பும் காரணமல்ல, பிறகு எது காரணம்? அதற்குள் போகவில்லை குருமூர்த்தியார். வை தீக மதத்தையும், சாதியத்தையும் காத்து நிற் பதில் குறியாக இருக்கிறாரே தவிர, வேறு எது காரணமாக இருக்கும் என்று அலசவில்லை. அது பயனற்றது என்பதை அவர் அறிவார். உண்மையான காரணம் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டு விட்டது. அதை மூடி மறைக்கிற வேலை மட்டுமே தங்களுக்கு இருப்பதை இவ ரைப் போன்ற பழமைவாதிகள் அறிவார்கள்.ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்து முடிவில் ஆட்சியையே பிடித்து விட்டார்கள், துலாக்கோல் பிடித்து வந்து முடிவில் செங்கோலைப் பிடித்து விட்டார்கள். இதற்கு மூலகாரணம் இங்கே இருந்த நிலப் பிரபுத்தவத்தை விட அவர்கள் வசம் முத லாளித்துவம் எனும் நவீன அமைப்பு இருந் தது. அவர்கள்தாம் அதை நமக்கு அறிமுகப் படுத்தினார்கள். அதன் பிறகுதான் இங்கே நவீன தொழில்வளர்ச்சி ஏறபட்டது. ஏகாதிபத் திய ஆடசி எனும் கெடுதலில் நமக்கு கிடைத்த ஒரு நன்மை அது.

இப்போதும் அந்த முதலாளித்துவம்தான் இங்கே பரவி வருகிறது - அதனுடைய சகல எதிர்மறைக் கூறுகளுடனும்.இங்கே ஒரு முக்கியமான கருத்தைப் பதிவு செய்கிறார் குருமூர்த்தியார். அது : “இந் தியா தன் சொந்தப் பொருளாதார முன்மாதிரி யை உருவாக்கிக் கொண்டிருக்கிறது....(இது) உயிர்த்துடிப்போடு இயங்கும் இந்திய சமு தாயத்தின் அங்கங்களான இந்தியக் குடும்பங் கள், சமூகங்கள், சாதிகள் எதையும் தனிமைப் படுததி அணுமயமாக்கவில்லை. எப்போதும் நம் மேட்டுக்குடி மக்களால், நம் ஜனநாயக அர சியல் சமுதாயம் சிதைவதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் சாதிய, சமூக அடிப்படையிலான அரசியல் கூட ஒரு வகையில் ஒத்திசைந்து போகக்கூடிய ஒரு வழிமுறைதான்.”இந்திய முதலாளித்துவம் முழுக்க முழுக்க மேற்கத்திய பாணி அல்ல. அங்கே உருவான முதலாளித்துவமானது அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ அங்கங்களை எல்லாம் சிதற டித்துவிட்டது. இங்கே உருவான முதலாளித் துவமோ அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ அங்கங்களான குடும்பங்களை மட்டுமல்ல, “சமூகங்கள், சாதிகள்” என்பவற்றையும் பாது காத்துக் கொண்டது, அவற்றோடு ஒத்தி சைந்து போனது, அதாவது, மேற்கத்திய முத லாளித்துவம் காலாவதியான நிலப்பிரபுத் துவத்தை முட்டி மோதி வீழ்த்தியது என்றால் இந்திய நிலப்பிரபுத்துவமோ அத்தோடு பல விஷயங்களில் சமரசம் செய்து கொண்டது. இதுதான் இந்திய முதலாளித்துவத்தின் தனிச் சிறப்பு. இதுவே குருமூர்த்தியாரின் கருத்து.இது நல்ல ஒப்புதல் வாக்குமூலம். இதை யொரு பெருமையான விஷயமாகக் கருதி, இங்கே முதலாளித்தவமானது சாதியத்தோடு எப்படி இசைந்து போகிறது, ஒட்டி உறவாடு கிறது என்பதற்கு உதாரணங்களையும் தரு கீறார் மனிதர்.

சில சாதிகளின் பெயர்களைச் சொல்லி, அந்த சாதியக் கட்டமைப்புக்குள்ளேயே அவர்கள் எப்படி சில தொழில்துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள் என்று பெருமிதத் தோடு குறிப்பிட்டிருக்கிறார். பிறகு இதை யொரு கருத்தியலாக இப்படி வடித்தெடுக் கிறார் : “ இந்தியாவில் சாதி, சமூகங்கள் எல்லாம் அண்டைப்புறம் தாண்டிச் செயல்படும் சமுதாய அமைப்புகளாகும். மேற்கத்திய நாடுகளில் தொழில்மயமாக்கத்தி னால் மக்களிடையே இருந்த அண்டைப் புற உறவுமுறைகள் குலைக்கப்பட்டன. ஆனால் நம் நாட்டின் சாதிய, சமூக அமைப்புகளால் தொழில் மயமாக்குதலின் பிரச்சனையை எளி தாகவும், செயலாற்றலுடனும் கையாள முடிந்தது.”இந்திய முதலாளித்துவமானது மடிசஞ்சி நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டணி அமைத் திருப்பதைக் கொஞ்சி மகிழ்கிறார். இந்த நவீன காலத்தில் சாதியத்தை இப்படிப் பச்சையாக ஆதரிக்கிற ஓர் அறிவு ஜீவியை நீங்கள் கண் டதுண்டா? சங் பரிவாரத்தில்தான் அப்படிப் பட்ட ஆட்கள் இருப்பார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிப் போனது.முதலாளித்துவ வளர்ச்சிக்கு சாதியம் இடையூறாக இல்லை, மாறாக உதவியிருக் கிறது என்று கைநடுங்காமல் எழுதியிருக் கிறார். “சுதந்திரம், சமத்தவம், சகோதரத்துவம்” என்று ஐரோப்பாவில் முழங்கிப் புறப்பட்ட முதலாளித்துவம் இந்தியாவில் சாதியம் எனும் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டில் மடங்கிப் போய் தனது கொள்கை முழக்கத் தைக் கைவிட்ட கொடுமையைச் சுத்தமாக மறைத்திருக்கிறார். அந்த அசிங்கத்தை அற்புதச் செயலாக வருணித்திருக்கிறார்.கனடாவின் “நார்தர்ன் பிரிட்டிஷ் கொலம் பியா பல்கலைக்கழகத்தை” சார்ந்த மூன்று பேராசிரியர்கள் இந்தியக் கம்பெனிகளின் இயக்குனர் அவைகளில் சாதியம் எப்படி நிலவுகிறது என்பது பற்றி ஓர் ஆய்வு நடத்தி னார்கள்; அதன் முடிவுகளை “எக்னாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி” இதழில் (11-8-12) வெளியிட்டார்கள். தங்களது இந்த ஆய் வுக்காக இந்தியாவின் ஆயிரம் பெரிய கம்பெனி களை எடுத்துக் கொண்டார்கள். இந்தியாவின் அனைத்துக் கம்பெனிகளது மொத்த சந்தைப் படுத்தப்பட்ட மூலதனத்தின் ஐந்தில் நான்கு பங்கு இந்த ஆயிரம் கம்பெனிகளுக்குடையது. அப்படியென்றால் இவை எவ்வளவு பெரிய வை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அவர்களது ஆய்வு முடிவுகள் வருமாறு: “இயக்குநர் அவை உறுப்பினர்களில் 93 சதவிகிதம் பேர் முன்னேறிய சாதியினர். 46 சதவிகிதம் பேர் வைசியர்கள், 44 சதவிகிதம் பேர் பிராமணர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் முறையே 3.8 சதவிகிதம் பேர் மற்றும் 3.5 சதவிகிதம் பேர். கிட்டத்தட்ட 65 சதவிகிதம் இந்தியக் கம்பெனிகளின் இயக் குநர் அவை ஒவ்வொன்றும் ஒரேயொரு முன் னேறிய சாதியினரைக் கொண்டுள்ளது.”சரித்திர ரீதியான நியாயப்படி பார்த்தால் நிலப்பிரபுத்துவ சாதியத்தை முதலாளித்துவம் சிதைத்திருக்க வேண்டும். இந்தியாவிலோ அது சாதியத்தோடு சமரசம் செய்து கொண் டுள்ளது. இங்கே வர்க்கமும் சாதியமும் இன்ன மும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இந் திய முதலாளித்துவத்தின் படுபிற்போக்குத் தனமான குணம் இது தான். இதைத்தான் குருமூர்த்தியார் ஏற்றிப் போற்றுகிறார்!இன்னும் சொல்லப்போனால், நம்நாட்டு முதலாளித்துவம், தாழ்த்தப்பட்ட - பழங்குடி யின - பிற்படுத்தப்பட்ட மக்களை மட்டுமல் லாது மதச் சிறுபான்மையினரான முஸ்லிம் களையும் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறது. இந்தியப் பெரும் கம்பெனிகளில் - அவற்றின் இயக்குனர் அவைகளில் - இவர்கள் மிகச் சொற்பமே என்பதையும் இந்தப் புள்ளிவிபரங் கள் வெளிப்படுத்துவதை நோக்குங்கள். ஏற் கனவே இதுபற்றி சச்சார் குழுவும், மிஸ்ரா கமி சனும் பேசியிருக்கின்றன. இந்தியத் தொழில் துறையில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படு கிறார்கள் என்பதை உணர்ந்துதான் இவர் களுக்கென்றே தனி நிதி கார்ப்பரேசன் ஏற்படுத்தப்பட வேண்டிய நிலைமை இங்கே உள்ளது. ஆனால், குருமூர்த்தியாருக்கோ இதுவெல்லாம் இந்தியப் பெருமையாக உள்ளது.”“முறைசாரா அமைப்புகளோடு இணைந்து செயலாற்றக்கூடிய ஒரு சந்தை.... அது மட்டுமே நிலைத்து நிற்கும்” என்றாரே அது இப்படிப்பட்ட இந்திய முதலாளித்துவம் தான். சாதி மதப்பாகுபாடு காட்டிக் கொண்டே வளருகிற முதலாளித்துவம் தான். இதிலே பாலினப்பாகுபாட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும் கம்பெனிகளது நிர்வாகத் தில் பெண்களின் பங்கும் மிகமிகச் சொற்பமே. இதுபற்றி பெண்களுக்கான தேசிய கமிசன் தனது கவலையை அவ்வப்போது வெளி யிட்டு வருகிறது. மொத்தத்தில் இந்திய பாணி முதலாளித்துவமானது சாதியமும், ஆணாதிக் கமும் நிறைந்த வருணாசிரம முதலாளித் துவம். இதைத்தான் துதிக்கிறார் மனிதர்.இதைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும், குலைத்து விடக்கூடாது என்றும் இப்படி வலி யுறுத்துகிறார். “வளர்ந்து வரும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு, குழந்தைகளின் உரிமை தொடங்கி பெரியவர்களின் உரிமை, பெண் ணுரிமை, ஒற்றைப்பாலினர் உரிமை வரை அனைத்துமே சமுதாயத்தைப் பிரிக்கவே உதவுகின்றன. இவை முறைசாரா அமைப்பு களையும், உறவுமுறைகளையும் வலுவிழக்கச் செய்து விட்டன.” பெண்ணுரிமை எல்லாம் பேசக்கூடாது, மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வே இருக்கக்கூடாது, அப்படி இல் லாமலாக்கியதுதான் பாரதத்தின் முறைசாரா அமைப்புகளும், உறவுமுறைகளும்! இவற் றைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டே இங்கே முதலாளித்துவம் வளருகிறது. ... அது தொடர வேண்டும் அது மட்டுமா? இதுவே அமெரிக் கப் பாணி முதலாளித்துவத்திற்கு சரியான மாற்று! இதை உலகம் முழுக்க ஏற்க வேண் டும், இந்திய வருணாசிரம முதலாளித் துவத்தை உலகம் முழுக்கக் கொண்டு வரப் பகற்கனவு காண்கிறது ஆர்எஸ்எஸ். அதையே எதிரொலிக்கிறார் இந்த பிரகஸ்பதி.குருமூர்த்தியாருக்குச் சொல்லிக் கொள் வோம் - உங்கள் கனவு பலிக்காது. அமெரிக்க பாணி முதலாளித்துவம் அழியப்போவது உண்மை. ஆனால் அதனிடத்தில் கேடு கெட்ட இந்திய பாணி முதலாளித்துவம் வராது. மாறாக, சகல பாணி முதலாளித்துவமும் அழி யும். அதனிடத்தில் சோசலிச சமுதாயம் மல ரும்.

அதுவே முதலாளித்துவத்திற்கான மெய்யான மாற்று.மார்க்ஸ் இன்னும் வாழ்கிறார், தனது சீரிய விஞ்ஞானச் சிந்தனையால் வாழ்கிறார். அவரின் தேவையை உலக வாழ்வு நித்தம் நித்தம் உணர்த்திக் கொண்டிருக்கிறது. பூமிப் பந்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்ல, இந்த “புண்ணிய பூமி”-க்கும் அவர் தேவைப்படு கிறார்.நிலப்பிரபுத்துவத்தின் சாதியத்தை ஒழிக்க வேண்டிய முதலாளித்துவம், அதனோடு கூட்டுச் சேர்ந்து கொண்ட அநீதி இங்கே நடந் திருக்கிறது. தனது எதிரி செய்து முடித்திருக்க வேண்டிய வேலையும் தனது தோள் மீது விழுந்திருப்பதை இந்தியப் பாட்டாளி வர்ககம் உணர்ந்திருக்கிறது. அது வருணாசிரமம், முதலாளித்துவம் இரண்டையும் ஒருசேர வீழ்த்தி இங்கும் சோசலிசத்தை உருவாக்கிக் காட்டும். அதற்கும் மாமேதை மார்க்சே வழி காட்டுவார். அந்த வெற்றி கீதத்தை குரு மூர்த்தியார் கேட்காமல் போகலாம்; ஆனால் அவரின் சந்ததியார் கண்டிப்பாகக் கேட்பார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனதை உடைக்கும் வல்லமை

ஸ்னோடென் - அமெரிக்காவை அலற வைத்தவர்.

மோடி எவ்வளவு நேர்மையாளர்?